மேலும் செய்திகள்
போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி
05-Oct-2024
செம்மஞ்சேரி:ஓ.எம்.ஆரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி செல்லும் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை, 80 அடி அகலம் கொண்டது. வழக்கமாக போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தது. ஓ.எம்.ஆர்., மெட்ரோ ரயில் பணியால் தாம்பரம், மேடவாக்கம் நோக்கி, இருவழிப்பாதையாக செல்பவர்கள், சில மாதங்களாக இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.குறிப்பாக குடிநீர், கழிவுநீர் லாரிகள், பள்ளி, கல்லுாரி பேருந்துகள் அதிகமாக செல்கின்றன. இதனால், வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. செம்மஞ்சேரி கால்வாய் பாலம் நான்குவழி சந்திப்பில், ஒரு கனரக வாகனம் எதிர் திசையில் கவனக்குறைவாக திரும்பி, மீண்டும் பின்னால் வந்து முன்னோக்கி செல்லும் போது, மூன்று திசைகளில் இருந்து வரும் வாகனங்கள் முட்டிக் கொள்கின்றன. அடுத்தடுத்து வரும் வாகனங்கள் முந்திச் செல்ல முயலும்போது, கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. இது, 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், மேலும் அதிகரிக்கிறது. இதனால் பள்ளி, கல்லுாரி மற்றும் ஐ.டி., நிறுவனங்கள் செல்லும் வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன.இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது: காலை வணக்கம் பாடல் முடிந்த பிறகு தான், பள்ளிக்குள் செல்கிறோம். காலதாமதமாக சென்றால், கல்லுாரி நிர்வாகம் கடிந்து கொள்கிறது. ஐ.டி., நிறுவனங்களில் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறோம். தாம்பரம், சேலையூர், மேடவாக்கம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு, இந்த சிக்கல் அதிகரிக்கிறது. செம்மஞ்சேரி மேம்பால சந்திப்பில் போக்குவரத்து போலீசார் நிற்பதில்லை. சில நேரம், வாகன ஓட்டிகளே நெரிசலை சரி செய்கின்றனர். 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், போக்குவரத்து போலீசார் நின்றால், நெரிசல் ஏற்படாமல் சீராக செல்ல முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
05-Oct-2024