உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நகராட்சியாக...தரம் உயர்வு!

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நகராட்சியாக...தரம் உயர்வு!

திருக்கழுக்குன்றம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் பெரிய பேரூராட்சியாக உள்ள திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நிர்வாகப் பகுதியை, நகராட்சி நிர்வாக பகுதியாக தரம் உயர்த்த, நகராட்சி நிர்வாக துறை முடிவெடுத்துள்ளது. நகராட்சி எல்லைப்பகுதிக்குள், புதிய ஊராட்சி பகுதிகள் இணைக்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி நிர்வாக பகுதிகளில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி குறிப்பிடத்தக்கது. இப்பேரூராட்சி நிர்வாகம், கடந்த 1899ல் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.தேர்வு நிலையில் இருந்து, சில ஆண்டுகளுக்கு முன் சிறப்பு நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது. திருக்கழுக்குன்றம், ருத்திரான்கோவில், மங்கலம், முத்திகைநல்லான்குப்பம், நாவலுார் ஆகிய பகுதிகள் ஒருங்கிணைந்து, 18 வார்டு பகுதிகள் உள்ளன.செங்கல்பட்டு மாவட்ட பேரூராட்சிப் பகுதிகளில், அதிக பரப்பும், மக்கள்தொகையும் கொண்டது. இப்பகுதியில், 2011 கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை 30,000 பேர்.தற்போது, 5,000த்திற்கும் மேற்பட்டோர் மேலும் அதிகரித்திருப்பர். தாலுகா, வட்டார வளர்ச்சி ஆகிய நிர்வாகங்களின் தலைமையிடமாகவும், இப்பகுதி உள்ளது.சார் - பதிவாளர், பொதுப்பணி, நெடுஞ்சாலை, வேளாண்மை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பொதுத்துறை, தனியார் வங்கிகள், அரசு மருத்துவமனை, அரசு, தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் ஆகியவை இயங்குகின்றன.அரசு நலத்திட்ட சேவைகளுக்காக, தினமும் ஏராளமானோர் இங்குள்ள அரசு அலுவலகங்களுக்கு வருகின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ் பிரசித்தி பெற்று விளங்கும் வேதகிரீஸ்வரர் கோவில், ஆன்மிக சிறப்பு வாய்ந்தது.பவுர்ணமி நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். மாவட்ட தலைநகர் செங்கல்பட்டிலிருந்து, 14 கி.மீ., தொலைவில் உள்ள நிலையில், பேரூராட்சிப் பகுதியில் புதியவர்கள் அதிக அளவில் குடியேறி, வசிப்பிட பகுதிகள் விரிவடைந்துள்ளன.மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில், முதலில் நகராட்சிப் பகுதியாக தரம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டு, பல ஆண்டுகளுக்கு முன்பே, பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசிடம் பரிந்துரைக்கப்பட்டது.ஆனால், நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி, சில ஆண்டுகளுக்கு முன், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சியை விட, மக்கள் தொகையிலும், பரப்பிலும் குறைந்த மாமல்லபுரம் பேரூராட்சியும் நகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளது.ஆனால், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டிய திருக்கழுக்குன்றம் குறித்து, அரசு நீண்டகாலமாக மவுனம் சாதித்தது. நகராட்சி நிர்வாகம் எனில், ஆணையருக்கே நிர்வாக அதிகார முக்கியத்துவம் என்பது கருதி, நகராட்சி தர உயர்வில், இப்பகுதி அரசியல் பிரமுகர்கள் அக்கறை காட்டவில்லை என, தெரிகிறது.இந்நிலையில், தற்போது திருக்கழுக்குன்றத்தை நகராட்சி நிர்வாகமாக தரம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுதும் நகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ள முக்கிய பேரூராட்சிகள் பட்டியலில், திருக்கழுக்குன்றமும் இடம்பெற்றுள்ளது.இதுகுறித்து, பேரூராட்சித் தலைவர் யுவராஜ் கூறியதாவது:இங்கு நகராட்சி பகுதிக்குரிய மக்கள்தொகை உள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துவரி, 39 லட்சம் ரூபாய் குடிநீர் கட்டணம், தொழில்வரி, கட்டட வரைபட அங்கீகார அனுமதி உள்ளிட்ட வகைகளில், மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளது.நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் பேரூராட்சிகள் பட்டியலில், திருக்கழுக்குன்றமும் இடம்பெற்றுள்ளது. இதனுடன் அருகில் உள்ள ஊராட்சிப் பகுதிகளை இணைக்க வாய்ப்பில்லை.தரம் உயர்வு பற்றி சட்டசபையில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பே, இதுபற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு வலியுறுத்தினால், மீண்டும் தீர்மானம் இயற்றுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை