திருவிடந்தை கோவில் 4 கிலோ தங்கம் ஸ்டேட் வங்கியில் டிபாசிட்
மாமல்லபுரம்:திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், பக்தர்கள் செலுத்திய 4.07 கிலோ தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில், 'டிபாசிட்' செய்யப்பட்டது. மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில் உள்ள, நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், வைணவ சமயத்தின் 108 திவ்ய தேசங்களில், 62வதாகவும், திருமண தடை பரிகார கோவிலாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் பல்வேறு வேண்டுதலுடன் வழிபடும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறிய பின் பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு, கடந்த 20 ஆண்டுகளாக செலுத்தப்பட்ட 4.07 கிலோ தங்கம், கோவில் நிர்வாகத்தால் பாதுகாக்கப்பட்டு வந்தது. கோவில்களின் காணிக்கை தங்கத்தை, பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தி, தங்க மதிப்பிற்கான வட்டியை பெறும் வகையில், தங்க முதலீட்டு திட்டத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்துகிறது. இக்கோவில் தங்கத்தையும், அத்துறை அமைச்சர் சேகர்பாபு வாயிலாக, தற்போது வங்கியில், 'டிபாசிட்' செய்துள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மதுராந்தகம் அடுத்த திருமலை வையாவூர், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலின் 4.04 கிலோ தங்கமும் வங்கியில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.