கஞ்சா விற்ற மூவர் கைது
செங்கல்பட்டு:கஞ்சா விற்ற வழக்கில், மூவரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் பகுதியில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லுாரி அருகில், போதையில் இரு வாலிபர்கள் தகராறு செய்து வருவதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு தகராறில் ஈடுபட்ட இருவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டீஸ்வரன், 18, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர், 19 என்பதும், ஆத்துாரில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லுாரியில் படித்து வரும் இவர்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையாகி தகராறு செய்ததும் தெரிந்தது. ஆத்துாரை சேர்ந்த பிரேம்குமார், 36, என்பவர், போதைப்பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து, ஆத்துார் பகுதியில் பதுங்கி இருந்த பிரேம் குமாரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர் தப்பி ஓட முயன்றபோது, கீழே விழுந்து வலது காலில் முறிவு ஏற்பட்டது. அவரை மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின், மூவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.