சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு
மதுராந்தகம்:மதுராந்தகத்தில் முக்கிய சாலைகளில் உள்ள கடைகளுக்கு செல்வோர் இருசக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை, சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்வதால், பொது போக்குவரத்து இடையூறாக உள்ளது.மதுராந்தகம் தேரடி தெரு, பஜார் வீதி, ஜிஎஸ்டி சாலை, சூனாம்பேடு ரோடு பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகின்றன.அதனால், மதுராந்தகம் நகர் பகுதியில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.நாள் முழுதும், நேரக் கட்டுப்பாடு இன்றி செல்லும் கல் குவாரி வாகனங்கள் மற்றும் வணிக வளாகங்கள், கடைகளுக்கு செல்வோர், தங்களின் வாகனங்களை, சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் போக்குவரத்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தும், கண்டுகொள்ளாமல் உள்ளனர். சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.