உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குருவன்மேடு - தாம்பரம் அரசு பேருந்து உரிய நேரத்தில் இயக்கப்படாததால் அவதி

குருவன்மேடு - தாம்பரம் அரசு பேருந்து உரிய நேரத்தில் இயக்கப்படாததால் அவதி

மறைமலை நகர், தாம்பரம் - குருவன்மேடு தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்து, உரிய நேரத்தில் இயக்கப்படாததால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குருவன்மேடு கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராம மக்கள் ஒரகடம், படப்பை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக சென்று வருகின்றனர். தாம்பரம் -- குருவன்மேடு தடத்தில், அரசு பேருந்து தடம் எண் '55எம்' இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து, கடந்த சில மாதங்களாக உரிய நேரத்திற்கு இயக்கப்படாததால், பயணியர் அவதியடைந்து வருகின்றனர். இதனால் பயணியருக்கும், பேருந்து ஓட்டுநருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பயணியர் கூறியதாவது: தாம்பரத்திலிருந்து குருவன்மேடு கிராமத்திற்கு இயக்கப்படும் தடம் எண் 55எம் அரசு பேருந்து, தினமும் ஐந்து முறை வந்து செல்லும். குருவன்மேடு, வடக்குபட்டு, உமையாள்பரணச்சேரி, காஞ்சிவாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பயணியர், இந்த பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். குருவன்மேடிற்கு வரும் போது, ஒவ்வொரு முறையும் 30 நிமிடங்கள் வரை பேருந்து காலதாமதமாக வருவதால், குறித்த நேரத்தில் பயணியர் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. குறிப்பாக, இரவு 8:30 மணிக்கு குருவன்மேடு வரும் பேருந்தில் பயணியர் குறைவாக இருந்தால், 5 கி.மீ.,க்கு முன், வடக்குபட்டு கூட்டுச்சாலையில் இறக்கி விட்டுச் செல்கின்றனர். இதனால், பெண் பயணியர் உட்பட பலர், தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த அரசு பேருந்தை உரிய நேரத்தில் இயக்க, போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி