பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டி பணம் பறித்த பெண் உட்பட இருவர் கைது
திருப்போரூர்: திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை, வெங்கூர் கிராமத்தில், தனியார் பெட்ரோல் 'பங்க்' உள்ளது. கடந்த 9ம் தேதி இந்த பெட்ரோல் பங்க்கில், காயார் கிராமத்தைச் சேர்ந்த அப்பாதுரை உள்ளிட்ட ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். அப்போது, இரவு 9:00 மணியளவில், இரண்டு பைக்கில் வந்த பெண் உட்பட ஐந்து பேர், பெட்ரோல் நிரப்பியுள்ளனர். அப்பாதுரை பெட்ரோலுக்கு பணம் கேட்ட போது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரது கழுத்தில் வைத்து, பணப்பையை பறித்துள்ளனர். அதில், 10,000 ரூபாய் இருந்துள்ளது. உடனே, அவர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதையடுத்து, ஊழியர் அப்பாதுரை, திருப்போரூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் சென்னை, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயமணி, 24, அசோக் நகரைச் சேர்ந்த வின்சி லவ்லி,25, உள்ளிட்டோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்கள் மீது சென்னை சூளைமேடு, ஆயிரம் விளக்கு, கண்ணகி நகர், வில்லிவாக்கம், குமரன் நகர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து நேற்று, ஜெயமணி, வின்சி லவ்லி ஆகிய இருவரை, போலீசார் கைது செய்து பைக், ஒரு கத்தி, 10,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை தேடி வருகின்றனர்.