வேன் - பைக் மோதல் வாலிபர்கள் இருவர் பலி
திருக்கழுக்குன்றம்: வேன் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி, இரண்டு வாலிபர்கள் இறந்தனர். செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கேசரிசாய் மனோஜ் ரெட்டி, 26, என்பவர், இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக, செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ், 26, என்பவர் பணிபுரிந்து வந்தார். பழைய கார் வாங்குவது தொடர்பாக, நேற்று முன்தினம் இவர்கள் இருவரும், 'பேஷன் புரோ' பைக்கில் திருக்கழுக்குன்றம் சென்றனர். பின், அங்கிருந்து செங்கல்பட்டு திரும்பினர். அப்போது, இரவு 11:30 மணியளவில், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஒரகடம் கிராம கூட்ரோடு பகுதியில், எதிரே வந்த தனியார் நிறுவன 'டெம்போ போர்ஸ்' வேனும், இவர்களது பைக்கும் நேருக்கு நேர் மோதின. இதில், இவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். தகவலின்படி வந்த திருக்கழுக்குன்றம் போலீசார், இவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து, இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.