உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / துார்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்கள் சிங்கபெருமாள்கோவிலில் அவதி

துார்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்கள் சிங்கபெருமாள்கோவிலில் அவதி

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்குவதால், கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் சிங்கபெருமாள்கோவில், திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம், பகத்சிங் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வங்கி, மருத்துவமனை, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு, தினமும் சிங்கபெருமாள்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு ஜி.எஸ்.டி., சாலை, மேட்டுத் தெரு, தேரடி தெரு, அனுமந்தபுரம் சாலை, சந்தைமேடு தெரு, கொல்லைமேடு தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளில், சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய்களில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் உள்ள பெரும்பாலான மழைநீர் வடிகால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்களாக மாறி உள்ளன. அவற்றில் பிளாஸ்டிக் குப்பை அதிக அளவில் குவிந்துள்ளதால், கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி, மழைக்காலத்தில் நெடுஞ்சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை, ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. முக்கிய தெரு ஓரங்களில் கான்கிரீட் கால்வாய்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளன. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து, இப்பகுதிகளில் வசிப்போர் அவதிப்பட்டு வருகின்றனர். கான்கிரீட் கால்வாய் இல்லாத இடங்களில் செடிகள் அடர்ந்து வளர்ந்து, கழிவுநீர் வெளியேறுவது தடைபடுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து கால்வாய்களையும் துார்வாரி, கிருமி நாசினி தெளித்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை