உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அர்பன் ஹட் கண்காட்சி மாமல்லபுரத்தில் துவக்கம்

அர்பன் ஹட் கண்காட்சி மாமல்லபுரத்தில் துவக்கம்

மாமல்லபுரம், மாமல்லபுரத்தில் ஆறு ஆண்டுகளாக பயனின்றி வீணான, 'அர்பன் ஹட்' வளாகத்தில், கைவினை கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கப்பட்டது.தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில், கைவினைக் கலைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். வாழ்வாதார தொழிலாக கற்சிலை உள்ளிட்ட சிலைகள் வடிப்பது, வண்ண ஓவியம் தீட்டுவது, பிரம்பு, பனையோலை, சணல், சங்கு உள்ளிட்ட இயற்கை பொருட்களில் வீட்டு உபயோக மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிப்பது என, பாரம்பரிய கைவினைத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த கைவினைப் பொருட்கள், சுற்றுலாப் பயணியரை கவர்வதால், விரும்பி வாங்குகின்றனர். கைவினைஞர்கள் தங்கள் தயாரிப்புகளை நேரடியாக விற்க இயலாமல் இடைத்தரகர், மொத்த வியாபாரிகள் ஆகியோரிடம், குறைந்த விலைக்கு விற்பதால், அவர்களின் லாபம் குறைகிறது.இதனால், அவர்கள் நேரடியாக சந்தைப்படுத்தி நுகர்வோரிடம் விற்க, மத்திய ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, கைவினைப் பொருட்கள் வளர்ச்சி ஆணையரக நிதியில் மாமல்லபுரத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக இடத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பில், 'அர்பன் ஹட்' எனப்படும் நகர்ப்புற கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்துதல் வளாகத்தை, கடந்த 2018ல் அமைத்தது. இத்திட்ட மதிப்பில், மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் பகிரும்.தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் பூம்புகார் நிறுவனம், கைவினைஞர் அடையாள அட்டை பெற்றவர்களை, பொருட்கள் விற்க தேர்வு செய்து, ஒரு கலைஞர் 15 நாட்கள் கடை நடத்த அனுமதிக்கும்.நாடு முழுதும் உள்ள கைவினைஞர்கள் கடை நடத்தி பயன் பெறலாம்.இவ்வளாகம், பாரம்பரிய சிற்ப பகுதிக்கு தொடர்பில்லாத கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்ததால், சுற்றுலா பயணியருக்கு தெரியவில்லை.இதனால் கைவினைஞர்கள் விரும்பாத சூழலில், பல ஆண்டுகளாக பயனின்றி வீணானது. இதுகுறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில், கண்காட்சி மற்றும் விற்பனை மேம்பாடு கருதி, கைவினை வளர்ச்சி ஆணையரகம், தற்போது நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இதையடுத்து கைவினைஞர்கள் 50 கடைகள் நடத்த, பூம்புகார் நிறுவனம் நேற்று கண்காட்சியை துவக்கியது. ஆணையரக இணை இயக்குனர் தனராஜன் கண்காட்சியை துவக்கி வைத்தார்.பல்வேறு கைவினைப் பொருட்கள் விற்பனை, வரும் 29ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும்.ஆணையரக இணை இயக்குனர் தனராஜன் கூறியதாவது:இக்கண்காட்சிக்காக, மத்திய அரசு 11 லட்சம் ரூபாய் அளித்துள்ளது. கைவினைஞர்கள் போக்குவரத்து செலவு, பொருட்கள் கொண்டுவரும் செலவு, அவர்கள் தங்குவதற்கென தினசரி 500 ரூபாய் வழங்கப்படும். அவர்களுக்கு கடை வாடகையும் கிடையாது. கைவினைஞர் மேம்பாடு, பயணியர் இவ்வளாகம் அறிவது கருதி, கண்காட்சி நடத்தப்படுகிறது. அடுத்தடுத்தும் கண்காட்சி நடத்த, ஏற்பாடு செய்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !