| ADDED : நவ 27, 2025 04:13 AM
பவுஞ்சூர்: நெல்வாய்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பழுதடைந்துள்ள பழைய நிழற்குடையை அகற்றி விட்டு, புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பவுஞ்சூர் அருகே நெல்வாய்பாளையம் கூட்ரோடு அருகே கூவத்துார் - மதுராந்தகம் சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. ஆக்கினாம்பட்டு ,நெல்வாய்பாளையம், மடையம்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் கூவத்துார், பவுஞ்சூர், மதுராந்தகம்,செங்கல்பட்டு, கல்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு பள்ளி, கல்லுாரி மாணவியர்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்பவர்கள் என, தினமும் ஏராளமானோர் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மக்கள் பயன்பாட்டிற்காக சாலை சந்திப்பில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாமல், பேருந்து நிறுத்த நிழற்குடை பழுதடைந்து உள்ளதால் மக்கள் பயன்படுத்துவது இல்லை. ஆகையால் கோடைக்காலம் மற்றும் மழைக் காலங்களில் பயணியர் வெயிலிலும், மழையிலும் நின்றபடியே காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய பேருந்து நிறுத்த நிழற்குடையை அகற்றி, புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.