சிங்கபெருமாள் கோவிலில் அணுகு சாலை அவசியம் அமைக்க வலியுறுத்தல்
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில் ஜி.எஸ்.டி., சாலையில், அணுகு சாலை தனியாக பிரிக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில்,இரும்புலியூர் -- வண்டலுார் வரை 2.30 கி.மீ., துாரம் 20.77 கோடி ரூபாயிலும், வண்டலுார் -- கூடுவாஞ்சேரி வரை 5.30 கி.மீ., துாரம் வரை 44.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் சாலை விரிவாக்க பணிகள் நடந்தன.மேலும் கூடுவாஞ்சேரி -- செட்டிபுண்ணியம் வரையும், சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றன.சிங்கபெருமாள் கோவில் பகுதியில் சாலை அகலப்படுத்தப்பட்டு, புதிய சாலை அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன.ஆனால் இதுவரை, அணுகு சாலை தனியாக பிரிக்கப்படவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். வாகன ஓட்டிகளுக்கிடையே தகராறும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால், அணுகுசாலையை பிரிக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி., சாலையில், 2 கி.மீ., துாரம் நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள், மருத்துவமனை, வங்கிகள் போன்றவை உள்ளன.சுற்றியுள்ள திருக்கச்சூர், கொளத்துார், அனுமந்தபுரம், செட்டிபுண்ணியம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தினமும் அன்றாட தேவைக்கு, சிங்கபெருமாள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அதே போல தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நிற்க, ஜி.எஸ்.டி., சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது.அதனால், எப்போதும் இந்த பகுதி கூட்டமாகவே காணப்படும்.இங்கு அணுகுசாலை தனியாக இல்லாததால், நாளுக்கு நாள் எதிர் திசையில் செல்லும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக, பலர் அடிக்கடி சிறு சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர். பள்ளி மாணவ -- மாணவியர், வேலைக்கு செல்வோர் என, பலரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பலர், சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால், 'பீக் - ஹவர்'களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வீண் சச்சரவுகள் தொடர்கின்றன.கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி ஜி.எஸ்.டி., சாலையில் விபத்தில் சிக்கி, ஐந்து பேர் உயிரிழந்து உள்ளனர்.எனவே, சிங்கபெருமாள் கோவில் பகுதியில் தனியாக அணுகு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
உள்ளூர் மக்கள் சென்று திரும்பி வர முறையாக அணுகு சாலை இல்லாததால், எதிர் திசையில் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல கடவுப்பாதை இல்லாததால் மெல்ரோசாபுரம், மகேந்திரா சிட்டி என, 2 கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த பகுதியில் தனியாக அணுகு சாலை அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கோ.கணேஷ்,செய்தி தொடர்பாளர்,மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு