சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் : நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மவுனம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு, வேதாசலம் நகரில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்துவதில், நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு நகராட்சியின் மையப்பகுதியாக உள்ள வேதாசலம் நகரில் வங்கிகள், தலைமை தபால் நிலையம், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளன. இங்கு இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களில் அதிகமானோர் வந்து செல்கின்றனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ள நிலையில், மாணவர்களும் அதிகமாக வந்து செல்வர். போக்குவரத்து அதிகமுள்ள வேதாசலம் நகரில் செயல்படும் வங்கிகள், தனியார் மருத்துவமனைகள் உள்ள பகுதிகளில், வாகனங்கள் நிறுத்த, 'பார்க்கிங்' வசதி இல்லை. இதனால், சாலைகளில் ஆங்காங்கே விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனம், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் தறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், இவ்வழியாக சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவியர், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கலெக்டர் உத்தரவு அலட்சியம்
வாகன ஓட்டிகள் கூறியதாவது: தனியார் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வங்கிகள் தனியாக 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த, அந்தந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என, நகராட்சி ஆணையருக்கு மாவட்ட கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை, நகராட்சி நிர்வாகம் அலட்சியப் படுத்தி வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலில் தினமும் தவிக்க வேண்டியுள்ளது. எனவே, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.