கடலில் மூழ்கி மாயமான சிறுமி மீட்க கோரி கிராமத்தினர் மறியல்
செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட சேம்புலிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசி.இவர், கடந்த 17ம் தேதி மாலை தன் குடும்பத்தினருடன், கடப்பாக்கம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு குளிக்கச் சென்றார்.அங்குள்ள முகத்துவாரம் பகுதியில் குளித்த போது, கலையரசியின் மகள்களான கிருத்திகா, 16, ஹாசினி, 13, ஆகிய இருவரும் கடலில் இழுத்துச் செல்லப்பட்டனர்.அருகே இருந்தவர்கள் உடனடியாக கடலில் இறங்கி, கிருத்திகாவை மீட்டனர். ஹாசினி கடலில் மூழ்கி மாயமானார்.தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த சூணாம்பேடு போலீசார், கடப்பாக்கம் பகுதி மீனவர்கள் மற்றும் கடலோரக் காவல் படையினருடன் இணைந்து, படகு வாயிலாக கடலுக்குள் சென்று, மாயமான சிறுமியை தேடினர். ஆனால், 3 நாட்களாக சிறுமி கிடைக்கவில்லை.இந்நிலையில், சிறுமியை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நேற்று காலை 8:30 மணியளவில் சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என, 200க்கும் மேற்பட்டோர், கடப்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் தாசில்தார் சரவணன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, விரைவில் சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.