சமுதாய நலக்கூடத்தில் காவல் நிலையம் விழா நடத்த முடியாமல் கிராமத்தினர் அவதி
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், காயார் கிராமத்தில், 2015ம் ஆண்டு புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இக்காவல் நிலைய எல்லையில் காயார், வெண்பேடு, பனங்காட்டுப்பாக்கம், கீரப்பாக்கம் உள்ளிட்ட, 27 கிராமங்கள் அடங்கியுள்ளன.ஆனால், இந்த காவல் நிலையத்திற்கு தனியாக கட்டடம் அமைக்காததால், சமுதாய நலக்கூடத்தில் கடந்த 9 ஆண்டுகளாக இடப்பற்றாக்குறையுடன் செயல்பட்டு வருகிறது.போலீஸ் குடியிருப்பு போன்ற வசதிகளும் இல்லாததால், போலீசார் பல கி.மீ. தொலைவில் உள்ள வீடுகளுக்குச் சென்று திரும்பும் நிலை உள்ளது. இதனால், காவல் நிலைய பணிகள் பாதிக்கப்படுவதுடன், போலீசாருக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.இதுகுறித்து, காயார் கிராமத்தினர் கூறியதாவது:காயார் கிராம மக்களின் பயன்பாட்டுக்காக சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், ஒன்பது ஆண்டுகளாக மேற்கண்ட கட்டடத்தில், காவல் நிலையம் இயங்கி வருகிறது. இதனால், கிராம மக்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த, 15 கி.மீ., தொலைவில் உள்ள திருப்போரூர், கண்டிகை, கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைக்காலத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கவும் முடியவில்லை. காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டினால், இந்த சமுதாய நலக்கூடத்தை பொதுமக்கள் பயன்படுத்த வசதியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூடுதல் போலீசார் தேவை
காயார் காவல் நிலையத்தில் 25 போலீசார் பணிபுரியும் நிலையில், தற்போது ஒரு எஸ்.ஐ., மற்றும் போலீசார் உள்ளனர். இக்காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள 27 கிராமங்களில், சில கிராமங்கள் நீண்ட துாரத்தில் உள்ளன.கீரப்பாக்கம், முருகமங்கலம் போன்ற கிராமங்களில் 3,000க்கும் மேற்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உருவாகியுள்ளன. நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்களும் அதிகரிக்கின்றன.முக்கியமான குற்றச்சம்பவங்கள் நடைபெறும் போது, பற்றாக்குறையால் உடனே போலீசார் செல்ல முடியாத நிலை உள்ளது. பல்வேறு பாதுகாப்பு பணிகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே, காயார் காவல் நிலையத்தில், எஸ்.ஐ., - எஸ்.எஸ்.ஐ.,க்கள், மற்ற போலீசார் என, 20க்கும் மேற்பட்டோரை நியமிக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.