கலெக்டர் அலுவலகம் பகுதியில் மின்விளக்கு அமைப்பது எப்போது?
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் பகுதியில், உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், வருவாய் அலுவலகம், கூட்டுறவுத்துறை, வேளாண்மைத் துறை, முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.இந்த அலுவலகங்களில், 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பணி முடித்து மாலை 6:30 மணிக்கு மேல், சொந்த ஊருக்குச் செல்ல, சாலையில் நடந்து செல்கின்றனர்.இப்பகுதியில் மின் விளக்கு இல்லாததால், இருள் சூழந்து உள்ளது. இதை பயன்படுத்தி, மர்ம நபர்கள் பெண்களிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.இதுமட்டுமின்றி, சாலையை குறுக்கிடும் போது, விபத்து அச்சத்துடன் ஊழியர்கள் செல்கின்றனர். இச்சம்பவங்களை தவிர்க்க, உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் பகுதியில், உயர்கோபுர மின் விளக்கு அமைக்க, நெடுஞ்சாலைத் துறைக்கு, கலெக்டர் அருண்ராஜ், கடந்த மே மாதம் உத்தரவிட்டார். ஆனால், நடவடிக்கை எடுக்காமல் நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எனவே, அரசு ஊழியர்கள், பொதுமக்கள் நலன் கருதி, உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.