பதநீர் இறக்க லைசன்ஸ் வழங்கப்படுமா? இடைக்கழிநாடு தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.கடப்பாக்கம், பனையூர், கோட்டைக்காடு, வெண்ணாங்குப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன.ஆண்டுதோறும் இப்பகுதியில் பிப்., முதல் ஜூலை மாதம் வரை பனைத் தொழிலாளர்கள் கள் மற்றும் பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர்.கள் மற்றும் பதநீர் விற்பதால் கிடைக்கும் வருமானம், இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.தற்போது கள் சீசன் துவங்க உள்ள நிலையில், மதுராந்தகம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள் இறக்குபவர்கள் மற்றும் கள் விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள், என பொது இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போஸ்டர் ஒட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கள் இறக்குவதில் கெடுபிடி அதிகமாக இருக்கும் என பனைத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் , இப்பகுதி பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு,சட்டப்படி பதநீர் இறக்கி விற்பனை செய்ய லைசன்ஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.