புதிதாக சமுதாய நலக்கூடம் விளாங்காடில் அமையுமா?
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த விளாங்காடு ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்படவில்லை.இதனால், இப்பகுதி வாசிகள் தங்கள் குடும்பங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளை நடத்த சூணாம்பேடு, சித்தாமூர், செய்யூர் என, 15 கி.மீ., தொலைவில் உள்ள தனியார் மண்டபங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும், தனியார் மண்டபங்களில் நடத்துவதால், அதிகஅளவிலான பணம் வீணாகி வருகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.விளாங்காடு ஊராட்சியில் சமுதாயநலக்கூடம் அமைத்தால், கொக்கரந்தாங்கல், அமந்தங்கரணை, வயலுார், தென்னேரிப்பட்டு ஆகிய கிராமவாசிகளும் பயன்பெறுவர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விளாங்காடு ஊராட்சியில் சமுதாய நலக் கூடம் அமைத்து, அதன் வாயிலாக ஊராட்சிக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.