குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வேப்பஞ்சேரியில் அமைக்கப்படுமா?
கூவத்துார்:வேப்பஞ்சேரி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அருகே கடலுார் ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பஞ்சேரி கிராமத்தில், 800க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வேப்பஞ்சேரி, தத்திரம்பேட்டை, கடலுார் காலனி, கூளியாமேடு உள்ளிட்ட ஆறு கிராம மக்களுக்கு, அப்பகுதியில் உள்ள பாலாற்றில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பாலாற்றில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி இருப்பதால், குடிநீர் கிணறுகளில் உள்ள தண்ணீர் கருப்பு நிறமாக மாறி, கிராமத்தினருக்கு மாசடைந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த பிரச்னையால், கடந்த 10 மாதங்களாக ஊரக வளர்ச்சித்துறை சார்பாக புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக கிராம மக்களுக்கு தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த குடிநீரை பயன்படுத்துவதால் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, கிராமத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அதிகமானோர் பணம் கொடுத்து 'கேன்' குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வாக, வேப்பஞ்சேரி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, துாய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.