மறைமலை நகர் காவல் நிலைய எல்லையில் கூடுதல் சிசிடிவி கேமரா அமைக்கப்படுமா?
மறைமலை நகர், மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் காவல் நிலைய எல்லையில் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட முக்கிய புறநகர் பகுதிகளும், இப்பகுதிகளைச் சுற்றி கிராமங்களும் உள்ளன. மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில், இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து, பலர் வேலை செய்து வருகின்றனர். ஆனால், மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல பகுதிகளில், குற்ற சம்பவங்களை கண்காணிக்க, போலீசாரின் மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. மேலும், சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களும், உடைந்து தரையைப் பார்த்த நிலையில் உள்ளன. கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் குற்றவாளிகளைப் பிடிக்க, கேமராக்கள் உதவியாக உள்ளன. ஆனால், மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மெல்ரோசாபுரம், கூடலுார், பேரமனுார், சிங்கபெருமாள் கோவில், செட்டிபுண்ணியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், போதிய அளவு கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. அதனால், இதுபோன்ற இடங்களில் புதிதாக கேமராக்கள் அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மறைமலை நகர் சிப்காட் பகுதியில், இரவு பணி முடிந்து செல்வோரை குறிவைத்து மொபைல் போன் பறிப்பு நடக்கிறது. தனியாக வசித்து வருவோரின் வீடுகளில் கொள்ளை நடக்கிறது. செயின், மொபைல் போன் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. மறைமலை நகர் பஜார் வீதிகளில் மட்டும், சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன. வளர்ந்து வரும் பகுதிகள், தெருக்கள் மற்றும் சிப்காட் பகுதிகளில் கேமராக்கள் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் காவல் துறையினரிடம் ஆலோசனை நடத்தி, மறைமலை நகரின் முக்கிய பகுதிகளில், புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.