உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கரும்பாக்கம்- - வளர்குன்றம் சாலையில் 500 பனை மரங்கள் அகற்றிய இடத்தில் மீண்டும் நடப்படுமா?

 கரும்பாக்கம்- - வளர்குன்றம் சாலையில் 500 பனை மரங்கள் அகற்றிய இடத்தில் மீண்டும் நடப்படுமா?

திருப்போரூர்: திருப்போரூர்- - செங்கல்பட்டு நான்கு வழிச்சாலை பணிக்காக, 500க்கும் மேற்பட்ட பனைமரங்கள் அகற்றிய இடத்தில் மீண்டும் பனை மரம் நடப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. திருப்போரூர்-- - செங்கல்பட்டு சாலை, 27 கி.மீ., உள்ளது. இந்த இரு ஊர்களிடையே மடையத்துார், செம்பாக்கம், கொட்டமேடு, வெங்கூர், கரும்பாக்கம், வளர்குன்றம், சென்னேரி, திருவடிசூலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு, இச்சாலை இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது. பின், திருப்போரூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் வருகை மற்றும் ஜி.எஸ்.டி., சாலைக்கு செல்லும் வாகனங்கள் அதிகரிப்பு காரணமாக, இச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. இதையடுத்து, 21 கி.மீ., வரை, 113 கோடி ரூபாய் செலவில் மழைநீர் கட்டமைப்பு, சிறுபாலங்கள் விரிவுபடுத்தல், மண்ணரிப்பு ஏற்படாமல் இருக்க சில இடங்களில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. சாலை விரிவாக்கத்தில் இடையூறாக உள்ள மரங்கள், ஆக்கிரமிப்பு கட்டடங்கள், கடைகள் அகற்றப்பட்டன. கரும்பாக்கம்- - வளர்குன்றம் இடையே சாலையின் இருபுறமும், 150 ஆண்டுகள் 500 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வளர்ந்து இருந்தன. சாலை அமைக்கும் அந்த நேரத்தில், பனை மரத்தை அகற்றாமல் அந்த இடத்தில் மட்டும் மாற்று வழி அமைத்தால் நல்லதாக இருக்கும் என மக்களிடையே கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு சாலை விரிவாக்கம் பணி காரணமாக சாலை ஓரம் வளர்ந்திருந்த 500 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அகற்றப்பட்டன. இருப்பினும் , பனை மரம் அகற்றிய இடத்தில் மீண்டும் அதற்கேற்ப பனை மரம் நடவு செய்து பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், பனை மரம் அகற்றிய இடத்தில் மீண்டும் பனை மரம் வளர்க்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மீண்டும் பனை மரக்கன்றுகள் நடப்படுமா என, சமூக ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை