மானாமதி அரசு மேல்நிலை பள்ளியில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுமா?
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மானாமதி கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி, 1964ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 2001ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில், 20 ஆண்டுகளுக்கு முன் குன்னப்பட்டு, காரணை, முள்ளிப்பாக்கம், இரும்பேடு, விப்பேடு உள்ளிட்ட கிராமங்களிலிருந்து, 1,200க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வந்தனர். தற்போது, 600க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் தான் படித்து வருகின்றனர். சுற்றுவட்டார கிராம மாணவர்கள் திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு விழா மேடை, பாதுகாவலர், பேருந்து நிழற்குடை, புதிய கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள் சேர்க்கை குறைந்ததாக கூறப்படுகிறது. எனவே, மாணவர்கள் சேர்க்கை, கல்வித் தரத்தை அதிகப்படுத்த, இப்பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, சுற்றுப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கூறியதாவது: இப்பள்ளி மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள் என, பலரை உருவாக்கியுள்ளது. இங்கு முள்ளிப்பாக்கம், குன்னப்பட்டு, திருநிலை, ஓட்டேரி, விப்பேடு ஆகிய கிராமங்களில் இருந்து, பல மாணவ - மாணவியர் படிக்க வருகின்றனர். சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. எனவே, மானாமதி கிராமத்திற்கு போக்குவரத்து வசதி, பள்ளிக்கு விழா மேடை, புதிய கட்டடம் அல்லது கட்டடம் புதுப்பிப்பு, பேருந்து நிழற்குடை வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.