கூவத்துார் சுகாதார நிலையத்தில் சுத்திகரிப்பு மையம் அமையுமா?
கூவத்துார்:கூவத்துார் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.இது, கடலுார், தென்பட்டினம், வேப்பஞ்சேரி, நெற்குணப்பட்டு உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும், 10,000த்திற்கும் மேற்பட்ட மக்களின் பிரதான சுகாதார நிலையமாக உள்ளது.இங்கு, பொது மருத்துவம், மகப்பேறு, அவசர சிகிச்சை, நோய்த் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆகையால், தினசரி நுாற்றுக்கும் மேற்பட்டோர், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், பல ஆண்டுகளுக்கு முன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பராமரிப்பு இன்றி, நாளடைவில் சேதமடைந்து, தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்தில், முறையான குடிநீர் வசதி இல்லாமல், கர்ப்பிணியர், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடுமையான சிரமப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.