மேல்மருவத்துார் பக்தர்களிடம் பணம் திருடிய பெண் கைது
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து, இருமுடி அணிந்த பக்தர்கள் வருகின்றனர்.மார்கழி மாதம் முதல் தை மாதம் நடைபெறும் தைப்பூசம் விழா வரையில், இருமுடி அணிந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.இந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து பக்தர்கள் அளித்த புகாரின்படி, கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் கண்காணித்தனர்.நேற்று முன்தினம், கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த வண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரது மனைவி நிர்மலா,57,கோவிலில் உள்ள கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பக்தர்களின் பையில் இருந்து பணம் திருடி உள்ளார்.இதுகுறித்து பக்தர்கள் அளித்த புகாரின்படி, மேல்மருவத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து, நிர்மலாவை கைது செய்தனர். பின், மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.