உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டில் நகை திருடு போனதாக நாடகமாடிய பெண்ணுக்கு எச்சரிக்கை

வீட்டில் நகை திருடு போனதாக நாடகமாடிய பெண்ணுக்கு எச்சரிக்கை

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பேரமனுாரில், வீட்டில் நகை திருடு போனதாக நாடகமாடிய பெண்ணை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். மறைமலை நகர் அடுத்த பேரமனுார், விக்னேஷ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா, 40. இவர், பொத்தேரி பகுதியிலுள்ள தனியார் கல்லுாரி விடுதியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை, இளையராஜா வேலைக்குச் சென்றுள்ளார். மதியம், இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட மனைவி இளவரசி, 35, தான் பொத்தேரியில் உள்ள பல் மருத்துவமனைக்குச் சென்ற போது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, 5 சவரன் நகைகளை திருடிச் சென்றதாக கூறியுள்ளார். உடனே இதுகுறித்து இளையராஜா, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதன்படி, மறைமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, வீட்டையும், அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இளையராஜாவும், வீட்டில் பல்வேறு பகுதிகளில் நகைகளை தேடினார். அப்போது, மொட்டை மாடியில் 5 சவரன் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார். இதுகுறித்து மனைவி இளவரசியிடம் கேட்ட போது, தன் தாய் வீட்டில் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுவதால், இதுபோன்று நாடகமாடி நகையைக் கொடுக்க முயன்றது தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன், பேரமனுார் பகுதியில் நடந்து சென்ற போது, பைக்கில் வந்த நபர் இளவரசி கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றதாகக் கூறி நாடகமாடி, தன் அம்மா வீட்டில் நகையைக் கொடுத்ததும் தெரியவந்தது. நடந்த சம்பவங்கள் அனைத்தையும் இளையராஜா, மறைமலை நகர் போலீசில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என, இளவரசியை எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ