உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கஞ்சா கும்பலால் பெண்கள் பீதி: கிராம சபை கூட்டத்தில் குற்றச்சாட்டு

கஞ்சா கும்பலால் பெண்கள் பீதி: கிராம சபை கூட்டத்தில் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, 359 ஊராட்சிகளில் நேற்று, கிராமசபை கூட்டம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், உள்ளாட்சி தினத்தையொட்டி, கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது. செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா தலைமையில், நேற்று நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் நிந்திமதி திருமலை, வனக்குழு தலைவர் திருமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இதில், மழைநீர் சேமிப்பு, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வடகிழக்கு பருவ மழைக்கு முன்னெச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சோத்துப்பாக்கம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோத்துப்பாக்கம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் தலைமையில், கூட்டம் நடந்தது. பற்றாளர் ரேணுகா முன்னிலையில், ஊராட்சியின் பொது வரவு, செலவினங்களை ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி வாசித்தார். சுத்தமான குடிநீர் வினியோகம், மழைநீர் வடிகால்வாய் ஏற்படுத்துதல் உள்ளிட்ட, 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருப்போரூர் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கத்தில், ஊராட்சி தலைவர் ராணி தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். கிராம வளர்ச்சி குறித்து ஆலோசனைகள் நடத்தி, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செய்யூர் செய்யூர் அருகே, சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புத்திரன்கோட்டை ஊராட்சியில் நேற்று காலை நடந்த கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மல்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் முரளி வரவு-செலவு கணக்கு விபரங்கள் வாசித்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, மின்கம்பங்கள் பழுது, கலைஞர் கனவு இல்லம், விளையாட்டு மைதானம், வீட்டுமனைப் பட்டா வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, மக்கள் முன்வைத்தனர். கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் சினேகா, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு, அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். தாம்பரம் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, புறநகர் ஊராட்சிகளில், நேற்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. தாம்பரம், கவுல்பஜார் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், கஞ்சா கும்பலின் அட்டகாசத்தால் பெண்கள் சாலையில் நடப்பதற்கே பயப்படுகின்றனர். அவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தும், போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர் என, கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். பொழிச்சலுார் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், இறக்கும் வளர்ப்பு பிராணிகளை, சாலையிலேயே வீசுவதால் துர்நாற்றம் அதிகரித்து, தொற்று நோய் பரவும் சூழல் ஏற்படுகிறது. திரும்பிய இடமெல்லாம் குப்பையாக காட்சியளிக்கிறது. கிராம சபை கூட்டத்திற்கு, வார்டு உறுப்பினர்கள் வருவதே இல்லை. அவர்கள் வராத நிலையில், மக்களின் குறைகளை யார் சரிசெய்வது என, அப்பகுதி மக்கள் வேதனையுடன் புகார் அளித்தனர். அப்போது, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொழிச்சலுார் ஊராட்சி மக்களின் வசதிக்காக, பம்மலில் இருந்து குடிநீர் குழாய் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில், பொழிச்சலுாருக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என, கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி கூறினார். முடிச்சூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், ஊதியத்தை உயர்த்தி, மாதந்தோறும், 2ம் தேதி வழங்க வேண்டும் என, துணை தலைவர் விநாயகத்தை நோக்கி, துாய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு, துணை தலைவரிடம் இருந்து சரியான பதில் வராததால், கூட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ஒருவர், 'துாய்மை பணியாளர்களுக்காக நான் போராடுவேன்' என்றார். அதனால், துணை தலைவருக்கும், கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், துாய்மை பணியாளர்கள், துணை தலைவருக்கு எதிராக திரும்பினர். இச்சம்பவத்தால், கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கிராம சபை புறக்கணிப்பு செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இரும்புலி ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இரும்புலியில் ஊராட்சி மன்ற தலைவியாக, சூரியகலா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இரும்புலி ஊராட்சியில், உள்ளாட்சிகள் தினத்தை ஒட்டி, நடைபெற இருந்த கிராமசபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்து, கிராம மக்கள் அறிவிப்பு பலகையை, ஊராட்சி சேவை மைய கட்டட வளாகத்தில் வைத்துள்ளனர். அதில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணியில் ஏற்பட்டுள்ள முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் வழங்காத நிலையில், உடனே பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி