உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏரிகளின் வெள்ளநீரை வெளியேற்ற கட்டிய கால்வாய் தனியார் காஸ் நிரப்பும் மையத்திற்காக உடைப்பு

ஏரிகளின் வெள்ளநீரை வெளியேற்ற கட்டிய கால்வாய் தனியார் காஸ் நிரப்பும் மையத்திற்காக உடைப்பு

சென்னை:சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், வடகரை சந்திப்பில் துவங்கும் மாதவரம் நெடுஞ்சாலை, மஞ்சம்பாக்கத்தில் நுாறடிசாலையில் இணைகிறது. இது, 6 கி.மீ., நீளம் உடையது. இதில் வடகரை முதல் வடப்பெரும்பாக்கம் வரை 2 கி.மீ., நெடுஞ்சாலைத்துறையின் திருவள்ளூர் கோட்டம் கட்டுப்பாட்டிலும், மீதமுள்ள 4 கி.மீ., சாலை சென்னை சாலைகள் பிரிவு கட்டுப்பாட்டிலும் உள்ளன. இச்சாலையில் வடபெரும்பாக்கத்தில், புழல் ஏரி உபரி நீர் கால்வாய் கடந்து செல்கிறது. ரெட்டேரி உபரிநீர் வெளியேறுவதற்கு கால்வாய் இல்லாததால், வடகிழக்கு பருவமழை காலங்களில், இரண்டு ஏரிகளின் உபரிநீரும், மாதவரம் நெடுஞ்சாலையில் 500 மீட்டர் துாரத்திற்கு மார்பளவிற்கு தேங்குகிறது. அத்தகைய நாட்களில், குறைந்தபட்சம் 10 நாட்கள் வரை போக்குவரத்து முடங்குகிறது. இதனால், சென்னை விரிவாக்கப் பகுதிகள் மட்டுமின்றி திருவள்ளூர் மாவட்ட மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மழைநீர் கால்வாய் கட்டும் பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடந்து முடிந்தன. இந்த நிலையில், மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே, சமீபத்திய மழையால் திடீரென பள்ளம் விழுந்துள்ளது. அதன் வழியாக தண்ணீர் வெளியேறியது. மழைநீர் கால்வாயை முழுமையாக முடிக்காமல், ஒப்பந்ததாரர், மண்ணை போட்டு மூடிசென்ற தகவல் அம்பலமானது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.இந்த சர்ச்சை அடங்காத நிலையில், வடப்பெரும்பாக்கம் அருகே, தனியார் காஸ் நிரப்பும் மையம் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு, சாலையில் தேங்கும் வெள்ளநீரை, விரைந்து வெளியேற்றுவதற்கு மழைநீர் கால்வாய் உயரமாக கட்டப்பட்டு உள்ளது. காஸ் நிரப்புவதற்கு வரும் வாகனங்கள் அதன்மேல் ஏறி செல்வதில் சிரமம் ஏற்படும் என கருதி, கால்வாயை உடைத்து உயரத்தை குறைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. நெடுஞ்சாலைத்துறை அனுமதியின்றி இப்பணிகள் நடக்கின்றன. இதனால், புழல் மற்றும் ரெட்டேரி வெள்ளநீரை சாலையில் தேங்காமல் தடுக்கும் முயற்சிக்கு முட்டுகட்டை விழுந்துள்ளது. மழைநீர் கால்வாய் கட்டி ஓராண்டு கூட முடியாத நிலையில், அதை சேதப்படுத்துவதால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை