சென்னை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், தினமும் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.தினமும் 32.09 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் இரண்டாம் கட்டமாக பல்வேறு முக்கிய வழித்தடங்களில், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதனால், பேருந்து நிறுத்தங்களும் சில இடங்களில், தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன.அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட வழியாக செல்லும் மாநகர பேருந்துகள், அந்த தடத்தில் உள்ள நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டுமென, உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், சில பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் இதை கடைப்பிடிப்பதில்லை என, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் போது, நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்காமல் செல்வதாக, நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து, விதியை மீறும் மாநகர பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.இது குறித்து மாநகரபோக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் சில நிறுத்தங்களில், மாநகர பேருந்துகள் நிற்காமல் செல்வதாக பயணியரிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்துள்ளன. அந்த அடிப்படையில், அவர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விதிமுறையை மீறும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங் அளிக்கப்படும். மேலும், எந்த நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல்சென்றாரோ, அதே பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று, பேருந்து இயக்க கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் பணி மேற்கொள்ள உத்தரவிடப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.