கால்வாய்கள் இணைக்க ரூ.2.80 கோடி ஒதுக்கீடு
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டல குழு கூட்டம், மண்டலக்குழு தலைவர் இந்திரன் தலைமையில், நேற்று நடந்தது. இதில், அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மணல் மூட்டைகள், ஆயில் இன்ஜின், தளவாட உபகரணங்கள் கொள்முதலுக்கு, 38.40 லட்சம் ரூபாய்க்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில், வாடகை அடிப்படையில், ஜே.சி.பி., பயன்படுத்த, 10 லட்சம் ரூபாய், பொக்லைன் இயந்திரம் பயன்படுத்த, 7 லட்சம் ரூபாய், ஜெனரேட்டர் பயன்படுத்த, 5.40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தவிர, அனைத்து கால்வாய்களையும், 52.10 லட்சம் ரூபாய் செலவில் துார்வாரி சுத்தம் செய்தல், 2.28 கோடி ரூபாய் செலவில், மழைநீர் கால்வாய்களை, இணைப்பு கால்வாய்களுடன் இணைத்தல் உள்ளிட்ட பணிகள் என மொத்தம் 57 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.