ஏலச்சீட்டு பணம் திருப்பி கேட்டவரை தாக்கி ஆட்டோ ஓட்டுநர் ரவுடியிசம்
பாண்டிபஜார், தி.நகர், ஆர்.கே.புரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 42; ஆட்டோ ஓட்டுநர். இவர், ஆட்டோ ஓட்டும் ஸ்டாண்டில், தி.நகர், ராஜபிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், 35, என்பவரும் ஆட்டோ ஓட்டி வருகிறார்.கிருஷ்ணகுமார் வாரம், மாதம் என, ஏலச்சீட்டு நடத்தி வருவதாக கூறியதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பிற ஆட்டோ ஓட்டுநர்கள், அப்பகுதி வியாபாரிகள் கிருஷ்ணகுமாரிடம் சீட்டு கட்டி வந்தனர். கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீட்டு முதிர்வடைந்தும், பணம் கட்டியவர்களுக்கு சீட்டு பணம் கொடுக்காமல் கிருஷ்ணகுமார் தலைமறைவானார். இதையடுத்து, கிருஷ்ணகுமார் பதுங்கி இருந்த அவரது நண்பரின் வீட்டிற்கு சென்று, கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் சீட்டு பணத்தை கேட்டுள்ளனர்.அப்போது, கிருஷ்ணகுமார் அடியாட்களை வைத்து, கிருஷ்ணமூர்த்தி மற்றும் நண்பர்களை இரும்பு கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்த புகாரையடுத்து, பாண்டி பஜார் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, தி.நகர், ராஜபிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், 35, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் விசாரணையில், கிருஷ்ணகுமார் இதேபோல், 20 நபர்களிடம் 40 லட்சம் ரூபாய் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.