உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 19ம் தேதி ஆட்டோக்கள் ஸ்டிரைக் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

19ம் தேதி ஆட்டோக்கள் ஸ்டிரைக் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை, 'சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வரும், 19ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது' என, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் அளித்த பேட்டி:ஆட்டோக்களுக்கு, 2013ம் ஆண்டு மீட்டர் கட்டணம் மாற்றப்பட்டது. அதாவது, 1.8 கி.மீ.,க்கு 25 ரூபாய்; அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும், 12 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின், 12 ஆண்டுகளாக கட்டணத்தை அரசு உயர்த்தவில்லை.இதற்காக பல கட்ட போராட்டங்கள் நடத்தினோம். கட்டணத்தை மாற்றி அமைக்கும் கோப்பு இரண்டு ஆண்டுகளாக, முதல்வரிடம் உள்ளதாக கூறுகின்றனர். ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் சட்டவிரோதமாக, 1.8 கி.மீ.,க்கு, 76 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன. அதில், 30 சதவீதம் கமிஷன் பெறுகின்றன. அத்தகைய நிறுவனங்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆட்டோக்களில், பயணியர் பாதுகாப்பு மற்றும் புகார்களுக்காக காவல் துறை கொண்டு வந்துள்ள, கியூ.ஆர்., கோடு ஸ்டிக்கர் ஒட்டும் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம், குறைபாடுகள் குறித்து, தொழிற்சங்கங்களின் ஆட்சேபங்களை காவல்துறை பரிசீலிக்கவில்லை.இந்நிலையில், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், ஆட்டோ செயலியை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, 11 தொழிற்சங்கங்கள் இணைந்து, வரும் 19ம் தேதி காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓடும், 1.20 லட்சம் ஆட்டோக்களில், 60 சதவீத ஆட்டோக்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. தொ.மு.ச., சங்கம் பங்கேற்கவில்லை என்றாலும், தொழிலாளர்கள் பங்கேற்பார்கள். போராட்டத்தில் பங்கேற்க பிற சங்கங்களுடனும் பேசி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை