உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செங்கல்பட்டு - தாம்பரம் தடத்தில் போதிய பஸ்களின்றி அவதி

செங்கல்பட்டு - தாம்பரம் தடத்தில் போதிய பஸ்களின்றி அவதி

சென்னை, செங்கல்பட்டு - தாம்பரம் தடத்தில் போதிய மாநகர பேருந்துகள் இயக்கப்படாததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும், 3000க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில், தினமும் 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். சென்னையின் எல்லைப்பகுதி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு, மகாபலிபுரம், திருவள்ளூர் என புறநகர் பகுதிகளுக்கும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்ட பின், அவ்வழியாக பல்வேறு வழித்தடங்களில் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. இருப்பினும் தேவைக்கு ஏற்ப, போதிய மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால், போதிய பேருந்து சேவை இன்றி, பயணியர் அவதிப்படுகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்களும் படிகளில் தொங்கியப்படி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: சென்னை புறநகர் பகுதிகளில், குடியிருப்புகள், தொழிற்சாலைகள், தனியார் அலுவலங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது, கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையமும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய சென்னை, வடசென்னை, பூந்தமல்லி போன்ற பகுதிகளில் இருந்து பேருந்துகளில் பயணிப்போர் கடும் அவதியடைய நேரிடுகிறது. வெளியூர் செல்வதற்கு 400 - 500 ரூபாய் பேருந்து கட்டணம் உள்ள நிலையில், பேருந்து நிலையம் செல்வதற்கு ஆட்டோ, டாக்சிகளுக்கு 15 கி.மீ., துாரத்துக்கு 400 ரூபாய் வரை செலவிட நேரிடுகிறது. குறிப்பாக பேருந்து நெரிசலால், முதியோர் பெண்கள், குழந்தைகள் அவற்றில் செல்ல முடியாமல், ஆட்டோ, டாக்சிகளை பயன்படுத்தும் அவசியம் ஏற்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து அனைத்து வழித்தடங்களிலும் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறிப்பாக, தாம்பரத்தில்இருந்து மண்ணிவாக்கம், வண்டலுார், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் போதிய அளவில் இல்லை.நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, பயணியரின் தேவைக்கு ஏற்ப, மாநகர பேருந்துகளை இயக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'கிளாம்பாக்கம் முனையத்தில் இருந்து போதிய அளவில் இணைப்பு பேருந்துகளை இயக்கி வருகிறோம். பயணியர் புகார்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !