| ADDED : ஜூலை 24, 2024 12:50 AM
சென்னை, சென்னை, கிண்டி கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 240.54 கோடி ரூபாய் செலவில், உலக தரத்தில் உருவாக்கப்பட்ட கருணாநிதி நுாற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அவர்களின் உறவினர்களுடன் விபரம் கேட்டறிந்தார். நரம்பியல் சிகிச்சைப் பிரிவுக்கு சென்று, அங்குள்ள நோயாளிகளை சந்தித்து பேசினார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்டார்.நோயாளிகளுக்கான உணவுக்கூடத்திற்கு சென்று, உணவின் தரத்தை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார்.'அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வந்து செல்வதால், மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும். டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவுக்கு, கூடுதல் டயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.மருத்துவமனையை துாய்மையாகவும், சுகாதாரமாகவும் தொடர்ந்து பராமரிக்கவும், நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை காலதாமதமின்றி வழங்கவும் அறிவுறுத்தினார். இதில், மருத்துவமனை முதல்வர் பார்த்தசாரதி, சிறப்பு அலுவலர் ரமேஷ் உடனிருந்தனர்.