உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மரங்களை வெட்டாமல் புதிய கட்டடங்கள் இடம் மாற்றி சி.எம்.டி.ஏ., புதிய முயற்சி

மரங்களை வெட்டாமல் புதிய கட்டடங்கள் இடம் மாற்றி சி.எம்.டி.ஏ., புதிய முயற்சி

சென்னை, சென்னையில், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளில் பல்வேறு கட்டுமான திட்டங்களை செயல்படுத்த சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதன்படி, சென்னை பெருநகரில், 26 எம்.எல்.ஏ., தொகுதிகளில், 34 கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக, 234 கோடி ரூபாய் நிதியை, சி.எம்.டி.ஏ., ஒதுக்கியது. இதில் பெரும்பாலான திட்ட பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், புழல் மகாலட்சுமி நகர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், 1 ஏக்கர் நிலத்தில் புதிய வகுப்பறைகள், 4 கோடி ரூபாயில் கட்ட திட்டமிடப்பட்டது.ஆவடி, அன்னனுார் கோனம்பேடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், 1.25 ஏக்கர் நிலத்தில், 4 கோடி ரூபாயில் புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இந்த நிலையில், இப்பள்ளிகள் வளாகத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்கள் இருப்பதால், கட்டுமான பணிகளுக்கு பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: புழல், ஆவடியில் புதிய பள்ளி கட்டடங்கள் கட்டும் இடங்களில் இருக்கும் மரங்களை வெட்டாமல், அவற்றை வேருடன் எடுத்து வேறு இடத்தில் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, உரிய வல்லுனர்களை பயன்படுத்தி, மரங்களை வேருடன் பெயர்த்து எடுத்து அருகில் வேறு காலி இடங்களில் நடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னை பெருநகரில் பசுமை பரப்பை பாதுகாப்பது மற்றும் உயர்த்தும் வகையில் சி.எம்.டி.ஏ., இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த அணுகுமுறை பிற இடங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி