உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ நிலையம் அமைக்கும் பணி போரூர் பைபாஸ் சாலையில் துவக்கம்

மெட்ரோ நிலையம் அமைக்கும் பணி போரூர் பைபாஸ் சாலையில் துவக்கம்

சென்னை, போரூர் பைபாஸ் சாலையில், புதிய மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதியாக, கோடம்பாக்கம் - பூந்தமல்லி வரையிலான மேம்பால பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான 60 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. போரூர் பைபாஸ் சாலை மேல் பகுதியில், மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணியர் வந்து செல்ல வசதியாக எஸ்கலேட்டர்கள், மின்துாக்கிகள், கழிப்பிடங்கள், 'சிசிடிவி' கேமரா உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும். இங்கு இருந்து இணைப்பு வாகனங்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தடத்தில், கோடம்பாக்கம் வரையிலான பணிகள் டிசம்பரில் முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.சோழிங்கநல்லுார் - மாதவரம் மெட்ரோ ரயில் தடத்தில் 47 கி.மீ., துாரத்தில், 46 ரயில் நிலையங்கள் அமைகின்றன. மாதவரத்தில் இருந்து ரெட்டேரி சந்திப்பு, வில்லிவாக்கம், வளசரவாக்கம், போரூர், ஆலந்துார், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம், பெரும்பாக்கம் வழியாக இந்த பாதை அமைகிறது. இந்த வழித்தடத்தில் பெரும்பாலும் மேம்பாலப் பாதை என்பதால், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட பிரமாண்ட துாண்களில் மேல், 'பா' வடிவில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.திருமங்கலம் பகுதியில் ஏற்கனவே உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பகுதியில் ஏற்கனவே உள்ள துாண்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்