குடிநீர் வாரிய இடத்தில் தொடர் அட்டூழியம் அத்துமீறி கொட்டும் குப்பையால் சீர்கேடு
அயனாவரம்,குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளால், அயனாவரத்தில் நோய் தொற்று அபாயம் நிலவுகிறது.அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட வில்லிவாக்கத்தில், நியூ ஆவடி சாலை அமைந்துள்ளது. ஒரு புறத்தில், வில்லிவாக்கத்தில் இருந்து, அண்ணா நகர், அயனாவரம் நோக்கி செல்லும் பாதையும், மற்றொரு புறத்தில் அயனாவரத்தில் இருந்து அண்ணா நகர், வில்லிவாக்கம், பாடியை நோக்கி செல்லும் பாதையும் உள்ளன.இதில், பாடியை நோக்கி செல்லும் பாதையின் சாலையோரம் ஐ.சி.எப்., ரயில்வேக்கும், வில்லிவாக்கத்தில் இருந்து அயனாவரத்தை நோக்கி செல்லும் சாலையோரம், 3 கி.மீ., துாரத்திற்கு குடிநீர் வாரியத்திற்கும் செந்தமான இடம் உள்ளது. காலியாக உள்ள வாரிய இடத்தில், குடிநீர் ராட்சத குழாய் செல்கிறது. இச்சாலையில், வாரியத்திற்கு சொந்தமான இடமான, வில்லிவாக்கம், ஐ.சி.எப்., உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தடுப்பு வெளி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, போதிய பராமரிப்பு இன்றி காலியிடமாக இருப்பதால், சீர்கேடு நிலவுகிறது. குறிப்பாக, 97வது வார்டு நியூ ஆவடி சாலையோரத்தில் அயனாவரம், சக்கரவர்த்தி நகர் உள்ளது. சக்கரவர்த்தி நகர் மற்றும் நியூ ஆவடி சாலையின் நடுவே இணைப்பு பாலம் உள்ளது. இந்த இணைப்பு பாலத்தில் அத்துமீறி சிலர் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது :அயனாவரம் பகுதியில் உள்ள சக்கரவர்த்தி நகர், தந்தை பெரியார் நகர் மற்றும் காமராஜர் தெருக்களுக்கு செல்ல நியூ ஆவடி சாலையை கடந்து இணைப்பு பாலம் வழியாக செல்ல வேண்டும்.தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் இடத்தில் பல ஆண்டுகளாக குப்பை கழிவுகள் தேங்கி இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நோய் தொற்று அச்சம் ஏற்படுகிறது.இடத்திற்கு சொந்தக்காரரான குடிநீர் வாரியம் அலட்சியமாக இருக்கிறது. இந்த பகுதியில் மட்டுமல்ல நியூ ஆவடி சாலையோரத்தில் உள்ள வாரியத்தின் இடம் முழுவதும் இதே நிலை தான் நிலவுகிறது.அதுமட்டுமின்றி, வாரியத்திற்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்தும், அத்துமீறுகின்றனர். இதனால், மழை காலங்களில் சீர்கேடு நிலவுவதுடன், கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது.இதுகுறித்து மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும், அலட்சியமாகவே இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, காலியிடத்தை துாய்மைப்படுத்தி, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.