ஜி.ஹெச்.,சில் ஒப்பந்த ஊழியர்கள் மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு
சென்னை, கொளத்துார், பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனை படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, நவீன மருத்துவ உபகரணங்களுடன் தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் புதிய உயர்சிறப்பு மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.இதற்கு, 210 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. புதிய மருத்துவமனை கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார். ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நிகராக, இந்த மருத்துவமனையை தரம் உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. விரைவில், மேலும் ஒரு கட்டடமும் கட்டப்பட உள்ளது.இந்த மருத்துவமனையில், 35 மருத்துவர்கள், 156 செவிலியர்கள், 10 பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட 266 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.இது குறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:முதல்வர் தொகுதியில் திறக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில், முறையாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாததை ஏற்க முடியாது.எனவே, மக்கள் நல்வாழ்வு துறை வாயிலாக, 24ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மருத்துவர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்யவேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.