பிராட்வே, சென்னை, திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பம், கால்வாய் தெருவை சேர்ந்தவர் பாபு, 28. கடந்த ஜூன் 30ம் தேதி, பாபு தன் உறவினர் தீனா, 30 என்பவருடன் பூக்கடை, ரத்தன் பஜார் வழியே நடந்து சென்றார். அப்போது அவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த ஆறு பேர் கும்பல், பாபுவை வழிமறித்து, கத்தியால் தலையில் வெட்டினர். தடுக்க முயன்ற தீனாவிற்கும் கையில் வெட்டு விழுந்தது. காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்த புகாரின் படி, பூக்கடை போலீசார் விசாரித்தனர். பாபுவை தாக்கிய, பல்லவன் சாலை, காந்தி நகரை சேர்ந்த கவுதம், 24, கபாலி, 22, அலமேலு, 20 மற்றும் மூன்று சிறுவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கத்தி மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், இரண்டு மாதங்களுக்கு முன் பாபு சிறையில் இருந்த போது, உடன் இருந்த கவுதமின் அண்ணன் மோகன் என்பவரை தாக்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில், கவுதம் தன் உறவினர்களுடன் சேர்ந்து பாபு மற்றும் அவரது உறவினர் தீனாவை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் மூவரை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.