பம்மல், புது பெருங்களத்துார், சிட்டிபாபு தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 40; அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது, மூன்றரை வயது மகன் மதன், ஜன., 3ம் தேதி, வீட்டில் ஹோட்டலுக்கு தயார் செய்து வைத்திருந்த சாம்பாரில் விழுந்தான்.தொடை, மார்பு, வலது கை ஆகிய இடங்களில் காயமடைந்த குழந்தையை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.இதில், கையின் பாதி பகுதியில் காயம் குணமடையவில்லை. தினசரி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றுவர முடியாததால், பம்மலில் உள்ள 'சினேகா ஜெனரல் சர்ஜிக்கல்' என்ற தனியார் மருத்துவமனையில், 45 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தான்.மருத்துவரின் ஆலோசனைப்படி, கடந்த 6ம் தேதி காலை குழந்தை மதனுக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய, ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றனர். உள்ளே செல்லும் போது, குழந்தை நன்றாக பேசிவிட்டு சென்றதாக தெரிகிறது.சில மணி நேரம் கழித்து, இரு மருத்துவர்கள் வந்து, தோலை அகற்றும் போது ரத்தம் அதிகமாக கசிவதாக கூறியுள்ளனர். பின், குழந்தை இறந்ததைக் கூட, பெற்றோருக்கு முறையாக தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மருத்துவரின் தவறான சிகிச்சையால் தன் மகன் இறந்ததாக, சங்கர் நகர் காவல் நிலையத்தில் செல்வம் புகார் அளித்தார். இப்புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.