சென்னை: சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் பானிபூரி, இளைஞர்களின் விருப்ப உணவு வகையாக உள்ளது. ஆனால், பானிபூரியில் புற்றுநோய்க்கான நிறமிகள் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.கர்நாடாகாவில் சாலையோரம் விற்பனை செய்யப்படும் பானிபூரி தரம் குறித்து, அம்மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பானிபூரிக்கான மசாலா நீரில் சேர்க்கப்படும் 'டை' வகையை சேர்ந்த 'ஆப்பிள் கிரீன்' நிறமியில், புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டது.இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் பயன்படுத்தப்படும் பூரி மசாலா மற்றும் மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்யவும், பயன்படுத்தப்படும் நீரின் தன்மை குறித்து ஆராயவும், தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்டு, மசாலா நீரின் மாதிரிகளை கைப்பற்றி வருகின்றனர்.சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பானிபூரி கடைகளில், நேற்று மாலை சோதனை நடத்தப்பட்டு, நீரின் மாதிரிகளை சேகரித்து, கிண்டி கிங்ஸ் பரிசோதனை நிலையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.
ஆரோக்கியமான உணவு
இதுகுறித்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது:சென்னையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானிபூரி கடைகள் செயல்பட்டு வருகின்றன. பானிபூரி ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்று. சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கும் உணவாகும். ஆனால், பானிபூரி கடைகளில் முறையாக பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.பானிபூரி தயாரிக்கும் முறையில், பச்சை நிறத்தில் நீர் தயாரிக்கப்படுகிறது. கொத்தமல்லி, புதினா இலையால், இவ்வளவு பச்சை நிறம் கிடைக்காது. இதற்காக, 'ஆப்பிள் கிரீன் டை' எனும் நிறமியை கலக்குகின்றனர். 10 லிட்டர் நீரில், ஒரு சிட்டிகை போதுமானது. இவற்றில் புற்றுநோய் காரணிகள் இருந்தால், சிறிது சிறிதாக புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. புற்றுநோய் காரணிகள் கண்டறியப்பட்டால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.