| ADDED : ஆக 07, 2024 12:59 AM
சென்னை, சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று, 'முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் மற்றும் பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:பெற்றோர்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருடைய கடமை. பெற்றோர்களுக்கு, 80 வயது ஆகும் போது உதவி தேவைப்படும். முதியவர்களை, சிலர் பாரமாக நினைக்கின்றனர். அதுபோன்ற எண்ணமே மகளிரான நம்மிடம் இருக்கக் கூடாது. நம்மை வளர்த்தவர்களை பாதுகாப்பது நம் கடமை என்ற உறுதிமொழியை, ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.இங்குள்ள ஒவ்வொரு மாணவியரும், இன்று எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.முதல்வர் ஸ்டாலின் அமல்படுத்திய 'புதுமைப் பெண் திட்டம்' வாயிலாக, 3.25 லட்சம் பேர் பயன் அடைகின்றனர். மாணவியர், தாங்கள் படிக்கும் கல்லுாரியின் வாயிலாகவே இதற்கு விண்ணப்பிக்கலாம்.பெண்களுக்கு, 18 வயதிற்குப் பின் தான் திருமணம் செய்ய வேண்டும். குழந்தை திருமண சம்பவங்கள் நடக்கும் முன், தெரிவிக்க வேண்டும். தெரிவிப்போரின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.