உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உள்ளூர் பிரச்னைகளால் தேர்தல் புறக்கணிப்பு

உள்ளூர் பிரச்னைகளால் தேர்தல் புறக்கணிப்பு

ஏகனாபுரம், சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் புதிதாக அமைய உள்ளது. இதற்காக, பரந்துார் மற்றும் அதை சுற்றிய கிராமங்களில், 5,400 ஏக்கர் தேவை. அதில், 3,750 ஏக்கர் தனியார் வசம் உள்ளது; மீதி அரசுக்கு சொந்தமான நிலம்.பரந்துார் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தினர் நேற்று, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அவரவர் அறுவடை செய்த நெல், உலர்த்தும் பணிகளை செய்து வந்தனர்.அதேபோல, நாகப்பட்டு கிராமத்தினர் பெரும்பாலானோர் ஓட்டளிக்க செல்லவில்லை. கிராமத்திலே இருந்துவிட்டனர். லப்பைகண்டிகை கிராமத்தில் சிலர் மட்டுமே ஓட்டளிக்க சென்றனர். ஏகனாபுரம் கிராமத்தில், அரசு ஊழியர்கள் மட்டுமாவது ஓட்டளிக்க வேண்டும் என, ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் சுந்தரமூர்த்தி நேற்று, ஓட்டுச்சாவடிக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவரிடம், அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்ததால், அவர் அங்கிருந்து சென்றார். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியம், குமாராஜபேட்டை கிராமத்தை ஒட்டி, பொன்னியம்மன் மற்றும் கொல்லாபுரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த வழியாக ஆறுவழி சாலை அமைக்கப்பட உள்ளதால், இந்த கோவில்களை இடித்து அகற்ற உள்ளனர்.இதை கண்டித்து, குமாரராஜபேட்டை கிராமத்தினர் நேற்று நடந்த லோக்சபா தேர்தலை புறக்கணித்தனர். வருவாய் துறையினர் பேச்சு நடத்தியும், குமாரராஜபேட்டை ஓட்டுச்சாவடி எண்: 34ல், மாலை 6:00 மணி நிலவரப்படி, 43 ஓட்டுகள் மட்டுமே பதிவாகின. இங்கு, மொத்தம் 976 ஓட்டுகள் உள்ளன. மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி கிராமத்தில், எல்.அண்டு.டி., கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் மற்றும் எம்.எப்.எப்., ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்த ஒன்பது பேர் 2016ல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பல கட்ட பேச்சு நடத்தியும், அவர்களுக்கு வேலை தரப்படவில்லை.இந்த நிலையில், தேர்தல் நாளான நேற்று, காட்டுப்பள்ளி மீனவ கிராமத்திற்கான ஓட்டுப்பதிவு மையம் காளஞ்சி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் இருந்தது. 380 வாக்காளர்களில் ஒருவர் கூட ஓட்டளிக்க வரவில்லை. வருவாய் துறை அதிகாரிகள், காட்டுப்பள்ளி கிராமத்தினர் பேச்சு நடத்தினர். இதையடுத்து, தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு, கிராமவாசிகள் மாலை 3:00 மணிக்கு மேல் ஓட்டுப்பதிவு செய்தனர். பொன்னேரி அடுத்த, மெதுார் - விடதண்டலம் செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக கூறி, அப்பகுதியினர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து, ஒன்றரை மணி நேரம் பேச்சு நடத்தியபின், ஓட்டளிக்க சென்றனர். அதேபோல் பொன்னேரி அடுத்த மடிமைகண்டிகை கிராமத்தினரும் தங்களுக்கு பேருந்து வசதி இல்லை எனக்கூறி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு நடத்திய பின், ஓட்டளிக்க வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ