சென்னை:தமிழகத்தில் சில ஆண்டுகளாக, ரியல் எஸ்டேட் துறையில் புதிய திட்டங்கள் வருகையால், பரவலான வளர்ச்சி காணப்படுகிறது.அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், புதிய அடுக்குமாடி மற்றும் தொகுப்பு குடியிருப்பு திட்டங்கள் அதிகரித்துள்ளன. குடியிருப்பு திட்டங்களுக்கு இணையாக, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில், ரிசார்ட்டுகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.இது குறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:சென்னை போன்ற நகரங்களில், குடியிருப்பு கட்டுவதில் பிரதானமாக உள்ள பெரிய நிறுவனங்கள், ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டுகள் துறையிலும் கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக, 'பிரிகேட், சீபிராஸ், பாஷ்யம்' போன்ற நிறுவனங்கள் தற்போது, ரிசார்ட்டுகள் கட்டுவதற்கான புதிய திட்டங்களை அறிவித்து உள்ளன.குடியிருப்பு திட்டங்கள் பிரிவில் வர்த்தகம் குறையும் நிலையில், இதில் தொய்வு ஏற்படும். குடியிருப்பு பிரிவில் வர்த்தகம் அதிகரிக்கும் சூழலில், பெரிய நிறுவனங்கள் புதிய ரிசார்ட் திட்டங்களிலும் ஆர்வம் காட்டும்.இந்த வகையில் தான் தற்போது, பிரபல கட்டுமான நிறுவனங்கள், ரிசார்ட் திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.கட்டட விதிகள் காரணமா?
இது குறித்து, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில், ரிசார்ட் திட்டங்கள் வருகை அதிகரித்துள்ளது.இங்கு, கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய நிலங்களில், கட்டடங்களுக்கு, 0.8 மடங்கு மட்டுமே எப்.எஸ்.ஐ., எனும் தளபரப்பு குறியீடு அனுமதிக்கப்படுகிறது. இதை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.இங்கு தளபரப்பு குறியீடு குறைவு, மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளால் கட்டுப்பாடு போன்ற காரணங்களால், நிறுவனங்கள் ரிசார்ட்டுகள் கட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றன.இது, ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் பிரிவில் வருவதால், பயன்பாட்டு நிலையில் குடியிருப்புகள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன. இப்பகுதிகளில் கட்டடங்களுக்கான விதிகளில், சூழலுக்கு ஏற்ற மாற்றங்கள் வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய திட்டங்கள் என்ன?
கிழக்கு கடற்கரை சாலையில் புதிய ரிசார்ட் திட்டங்கள் விபரம்: பிரிகேட் நிறுவனம் சார்பில், 250 அறைகள் கொண்ட ரிசார்ட் கட்ட திட்டம் வேல் குழுமம் சார்பில் ரிசார்ட் மற்றும் கன்வென் ஷன் மையம் கட்ட திட்டம் சீபிராஸ் நிறுவனம் சார்பில், நெம்மேலியில், 194 அறைகள் உடைய ரிசார்ட் கட்ட திட்டம் பென்ஸ்பார்க் நிறுவனம் சார்பில் புதிய ரிசார்ட் கட்ட திட்டம் பார்சூன் நிறுவனம் சார்பில் உத்தண்டியில் 100 அறைகளுடன் ரிசார்ட் கட்ட திட்டம்