சென்னைமனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்தின் தலைவர் சைதை துரைசாமி மற்றும் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், 19 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு, கடந்த ஆண்டு ஜூன் 3ல் முதல்நிலை தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட், 5ல் முதன்மை எழுத்து தேர்வு நடந்தது. இரண்டு தேர்வுகளுக்கும், மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகமும், புதுச்சேரி பார் கவுன்சிலும் இணைந்து, தேர்வர்களுக்கு பயிற்சி வழங்கியது.தேர்வின் முடிவுகள், கடந்த ஆண்டு, செப்.,26ல் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற, ஒன்பது வழக்கறிஞர்கள் நேர்முகத் தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்தனர்.அவர்களுக்கு, முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் உளவியல் பயிற்சியாளர்கள் வழியே, இலவசப் பயிற்சி தரப்பட்டது. நேர்முகத் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர், 9, 10ம் தேதிகளில் நடந்தது.திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜி.கார்த்திகேயன் முதலிடமும், தர்மபுரியைச் சேர்ந்த, எஸ்.இ.சத்தியன் இரண்டாம் இடமும், கன்னியாகுமரியை சேர்ந்த, டி.பி.செல்வ நாராயண பெருமாள் மூன்றாம் இடமும் பெற்றனர். புதுச்சேரியைச் சேர்ந்த கே.விசு என்பவரும் தேர்ச்சி பெற்றார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.