சென்னை:மத்திய சென்னையில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வினோஜ், நேற்று காலை, எழும்பூர் தொகுதிக்குட்பட்ட கெங்குரெட்டி சாலை, சுப்பராயன் தெரு உள்ளிட்ட பகுதிகளில், தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கடற்கரை ரயில் நிலையம் அருகில் உள்ள, அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.பின், அவர் கூறியதாவது:பா.ஜ., தலைமை வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அறிக்கையாக உள்ளது. இந்தியா 2047ல் எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கோடு, தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. மத்திய சென்னைக்கென தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.மத்திய சென்னையில் நிலவும் பிரதான பிரச்னைகள் மற்றும் மக்களுக்கு தேவையான விஷயங்களையும் தொகுத்து அமைத்துள்ளோம். இந்த பிரச்னைகள் எல்லாம், மக்களிடம் நேரிடையாக கேட்டு பெற்றவை.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி செய்வதால், யாரும் தொழில் துவங்கவோ முதலீடு செய்யவோ முன் வருவதில்லை. ஏனென்றால் தி.மு.க., குடும்பத்தினருக்கு, 30 முதல் 40 சதவீதம் வரை கமிஷன் கொடுக்க வற்புறுத்துகின்றனர். அதனாலே சாலைகள், மழைநீர் வடிகால்களில் தரம் இல்லாமல் இருக்கின்றன.மத்திய அரசின் திட்டங்கள், பல மாநிலங்களில் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. குஜராத், ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில், ஏராளமானோர் முதலீடு செய்கின்றனர். ஆனால், தமிழகத்திற்கு மட்டும் யாரும் முதலீடும் செய்ய முன் வருவதில்லை.தமிழகத்திலிருந்து தி.மு.க., விலகினால் மட்டுமே நல்ல விடியல் கிடைக்கும். தமிழகத்தை விட்டு ஸ்டாலின் எப்போது வெளியேறுகிறாரோ, அப்போதுதான் மக்களுக்கு நல்ல விடிவு கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.