இன்ஸ்டா பெண்ணிடம் பைக், போன் ஆட்டை
கொடுங்கையூர், கொடுங்கையூரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணிற்கு, 'இன்ஸ்டாகிராம்' சமூக தளத்தின் வாயிலாக, சிவா என்பவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் நட்புடன் பேசி வந்த நிலையில், அப்பெண் தனக்கு கடன் பிரச்னை உள்ளதை தெரிவித்துள்ளார்.சிவா தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி, குறைந்த வட்டிக்கு பணம் பெற்று தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.அவர் கூறியதின்படி, கடனுக்கு தேவையான ஆவணங்களுடன், கொண்டிசெட்டி தெருவில் உள்ள விடுதியில், கடந்த 3ம் தேதி மதியம், அப்பெண் சென்றுள்ளார்.அங்குள்ள ஒரு அறைக்கு, சிவா அப்பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்த மூவர் அப்பெண்ணிடம் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். மேலும், அப்பெண்ணின் இரு மொபைல்போன்களுடன் கைப்பையை திருடி, நுாதனமாக அறையை வெளியில் தாழிட்டு, அங்கிருந்து தலைமறைவாகினர்.அப்பெண் திறக்க சொல்லி கதவை தட்டிய நிலையில், விடுதியில் இருந்த நபர்கள் கதவை திறந்தனர். வெளியே வந்து பார்த்தபோது, அப்பெண்ணின் இருசக்கர வாகனமும் திருடு போயிருந்தது.இது குறித்து எஸ்பிளனேடு போலீசார் விசாரித்து, கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த அய்யப்பன், 40, துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்த வீரமருது, 33, திருவான்மியூர், பெரியார் நகரைச் சேர்ந்த ஷியாம், 23, ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர்.மூன்று மொபைல் போன்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதான குற்றவாளியான சிவாவை, போலீசார் தேடி வருகின்றனர்.