மடிப்பாக்கம்,மடிப்பாக்கத்தில், இரவு நேரத்தில் தொடர் மின் தடை ஏற்படுவதால், பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, மின் வாரிய ஊழியர் மது போதையில் இருந்ததால், பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்டது மடிப்பாக்கம். இங்கு, ஒரு மாதமாக, இரவு நேரத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.முக்கியமாக, ராம் நகர், சதாசிவம் நகர், குபேரன் நகர், ராஜாஜி நகர், சீனிவாசா நகர் ஆகிய பகுதியில், அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக, பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு மேல் 11:00 மணிக்குள், ஐந்து முறை மின்தடை ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள், மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று, அங்கு பணியில் இருந்த போர்மேன், ஒயர்மேன் ஆகியோரிடம் மின் தடை குறித்து கேட்டனர். அதற்கு ஊழியர்கள் மிக அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.இதில் ஓர் ஊழியர் மது போதையில் இருந்ததாகவும், அவரிடம் பொதுமக்கள் கேள்வி கேட்டபோது, பொறுப்பற்ற முறையில் அவர் பதில் அளித்ததாகவும், பொதுமக்கள் கூறினர்.இதனால் ஆத்திரமடைந்த மக்கள், உதவி பொறியாளரை மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை நிராகரித்துள்ளார். இதையடுத்து ஊழியர்களுடன் அவர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடம் வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். உதவி பொறியாளரை காவல் துறையினர் தொடர்பு கொண்ட பின், மின் தடை வினியோகம் சீரானதும், அனைவரும் கலைந்து சென்றனர்.