உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடகிழக்கு பருவமழைக்கு வளசரவாக்கம் மண்டலம் தப்புமா?

வடகிழக்கு பருவமழைக்கு வளசரவாக்கம் மண்டலம் தப்புமா?

வளசரவாக்கம்:வளசரவாக்கம் மண்டலத்தில் பெரும்பாலான பகுதிகள், கடந்த 2015, 2021 மற்றும் 2023 மழையில் பாதிக்கப்பட்டன. தற்போது நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள், அரைகுறையாக விடப்பட்டுள்ள வடிகால்கள், ஏரி ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட காரணங்களால், இந்தாண்டும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சென்னை வளசரவாக்கம் மண்டலம், 143 முதல்- 155வது வார்டு வரை என, 13 வார்டுகளை உள்ளடக்கியது. போரூர், ராமாபுரம், ஆலப்பாக்கம் என மூன்று ஏரிகளும், நீர்வழித்தடங்களாக கூவம், அடையாறு ஆறுகளும், விருகம்பாக்கம் மற்றும் நொளம்பூர் கால்வாய்களும் உள்ளன.இருந்தும், 2015ல் கொட்டி தீர்த்த மழையில் வளசரவாக்கம் மண்டலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. இதையடுத்து, உலக வங்கி நிதியின் கீழ் வடிகால்கள் அமைக்கப்பட்டன. அவை, விருகம்பாக்கம் மற்றும் நொளம்பூர் கால்வாய்களில் இணைக்கப்பட்டு, அடையாறு, கூவம் ஆற்றில் கலக்க திட்டம் தயாரிக்கப்பட்டது.ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் பல இடங்களில் திட்டமிடலின்றி மழைநீர் வடிகால் கட்டப்பட்டது. மேலும், நெடுஞ்சாலை துறை சாலைகளில் மழைநீர் வடிகால் இணைக்கப்படவில்லை. இதை, கடந்த 2021ம் ஆண்டு கொட்டி தீர்த்த கனமழை வெட்ட வெளிச்சமாக்கியது.சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடி தேங்கியது. நீர்நிலைகள் நிரம்பி குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. மண்டலத்தில் 40க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

கிடப்பில் திட்டம்

இதையடுத்து, 2022 -- 2023ம் ஆண்டு, 23 இடங்களில் 14.18 கோடி ரூபாய் மதிப்பீடில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன. அதேபோல், 2023 - - 2024ம் ஆண்டு 11 இடங்களில் 9.79 கோடி ரூபாய் மதிப்பீடில் வடிகால்கள் அமைக்கப்பட்டன.மண்டலத்தில், 24 கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால் பணிகள் நடந்தும், கடந்தாண்டு பெய்த மழையில், வளசரவாக்கம் மண்டலத்தில் ஆறு நாட்கள் மழைநீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டனர்.

கைவிடப்பட்ட பணி

வளசரவாக்கம் மண்டலம் ராமாபுரத்தில் வள்ளுவர் சாலை உள்ளது. இச்சாலை வளசரவாக்கம், ராமாபுரம், மவுன்ட் -பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில், இப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இச்சாலையில் உள்ள மழைநீர் வடிகால் வழியாக, வளசரவாக்கம் மண்டலம் 152, 154 மற்றும் 155வது வார்டுகளில் இருந்து வெளியேறும் மழைநீர், அடையாற்றில் கலக்கிறது.மழைநீர் வடிகால் துறை சார்பில், வள்ளுவர் சாலையில் வளசரவாக்கம் -- ராமாபுரம் செல்லும் பாதையில் இடது புறம் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு பெய்த பருவ மழையின் போதும், இச்சாலையிலும் அதைச் சுற்றியுள்ள நகர்களிலும் தண்ணீர் தேங்கியது.இதையடுத்து, 3 கி.மீ., துாரம் உள்ள சாலையில், அடையாறு ஆறு வரை, 2.6 கி.மீ., துாரத்திற்கு, நெடுஞ்சாலை துறை சார்பில், 20 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு பணிகள் துவக்கப்பட்டு நடந்து வந்தன.இந்த நிலையில், குடிநீர் வாரிய குழாய்கள் மற்றும் மின் கேபிள்கள் செல்வதால், ஒப்பந்ததாரர் பணியை தொடரவில்லை. இதையடுத்து, 2023ம் ஆண்டு பெய்த மழையிலும் இப்பகுதிகள் பாதிக்கப்பட்டன. தற்போது, இச்சாலை நெடுஞ்சாலை துறையிடம் இருந்து மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதியில் கைவிடப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளும் கிடப்பில் போடப்பட்டுளளது. இதனால், இந்தாண்டும் மழையால் இப்பகுதிகள் பாதிக்கப்படும் என, பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மெட்ரோ பணி

வளசரவாக்கம் ஆற்காடு சாலை நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ளது. இச்சாலையில் முறையாக மழைநீர் வடிகால் இல்லை. இதன் காரணமாக, மழைநீர் வெளியேற வழியின்றி, ஆற்காடு சாலை போரூர் சிக்னல், ஆபீசர்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தேங்குவது வாடிக்கை.தற்போது, இச்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. போரூர் முதல் ஆழ்வார்திருநகர் வரை உள்ள ஆற்காடு சாலையில் மழைநீர் வடிகால் இல்லாததால், இந்தாண்டும் அச்சாலையை ஒட்டியுள்ள நகர்களுக்கு வெள்ள பாதிப்பு அபாயம் உள்ளது.மேற்கண்ட பிரச்னைகளால், இந்தாண்டும் மழைக்கு வளசரவாக்கம் மண்டலம், மழை பாதிப்பில் இருந்து தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.-அதிகாரிகள் அலட்சியம்கடந்தாண்டு மழைக்கு வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்., நகரில் ஐந்து நாட்களுக்கு மேல் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளில் புகுந்தது. வீட்டில் சிக்கிய மக்கள் படகு வாயிலாக மீட்கப்பட்டனர். அடுத்த மழைக் காலம் வரும் நிலையில், இதுவரை வெள்ள தடுப்பு பணிகள் ஏதும் இப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால், வழக்கம்போல வெள்ள பாதிப்பு ஏற்படும்.- வே.முருகன், 48, எஸ்.வி.எஸ்., நகர். என்ன செய்வோம்?கடந்தாண்டு ஆலப்பாக்கம் ஏரி நிரம்பி வழிந்து, எங்கள் நகரில் வீடுகளின் கீழ்த்தளம் மூழ்கின. நகரில் உள்ள 50 சதவீதம் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு மழையில் என்ன செய்வோம் என, தெரியவில்லை.- சி.சதீஷ் குமார், 56,ருக்மணி நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலர், மதுரவாயல்.- துார் வாரும் பணி தீவிரம்வளசரவாக்கம் ஆற்காடு சாலையில், எஸ்.வி.எஸ்.நகர் சந்திப்பு முதல் ஆழ்வார்திருநகர் வரை உள்ள பழைய மழைநீர் வடிகால் கண்டுபிடிக்கப்பட்டு, துார்வாரப்பட்டு வருகிறது. அந்த மழைநீர் வடிகாலில் மெட்ரோ பணியின் சிமென்ட் கலவை கழிவுகள் நிறைந்துள்ளன. அத்துடன், ராமாபுரம் வள்ளுவர் சாலையில் விடுபட்ட மழைநீர் வடிகாலை இணைக்க, 9 கோடி ரூபாய் மதிப்பீடில் மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிட்டுள்ளோம். - மாநகராட்சி அதிகாரிகள்

ஆலப்பாக்கம் ஏரி

மதுரவாயல் - ஆலப்பாக்கம் சாலையில் ஆலப்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி, ஆக்கிரமிப்புகளால், 140 ஏக்கர் பரப்பளவில் இருந்து 10 ஏக்கராக சுருங்கியுள்ளது.கடந்த ஆண்டுகளில் பெய்த மழையின் போது, இந்த ஏரி நிரம்பி வழிந்து, 146, 147, 144, 148, 149 ஆகிய வார்டுகள் பாதிக்கப்பட்டன. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்ல, முறையான மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால், இந்த ஆண்டும் மழை பொழிவு அதிகம் இருந்தால், ஏரி நிரம்பி வழிந்து பாதிப்புகள் ஏற்படும் நிலைமை தான் நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை