சென்னை, வேளச்சேரி அருகே, முன்பகை காரணமாக பெயின்டரை கத்தியால் வெட்டிய வழக்கில், நான்கு வாலிபர்களுக்கு சிறை தண்டனை விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் அருண், 34. பெயின்டரான இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த சாய்ராம்,21, என்பவர், அவ்வப்போது பெயின்ட் அடிக்கும் பணிக்கு வந்துள்ளார்.பின், சாய்ராம் தனியாக பெயின்ட் அடிக்கும் பணியை செய்து வந்ததுடன், அருண் வேலைக்கு அழைத்தால் செல்லக் கூடாது என, மற்றவர்களிடமும் கூறியுள்ளார்.இதையறிந்த அருண், சாய்ராமை மிரட்டியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே, முன்பகை இருந்து வந்தது.கடந்தாண்டு ஏப்., 9ம் தேதி, வேளச்சேரி பாரதிநகர் சுடுகாடு அருகே, நண்பர் ராஜீவுடன் பேசியவாறு, அருண் மட்டும் மது அருந்தியுள்ளார்.அப்போது அங்கே, தன் நண்பர்களான யாகேஷ்வரன்,23, சித்தேஷ்வரய்யா,22, மணிபாரதி,22, ஆகியோருடன் வந்த சாய்ராம், கத்தியால் அருணை வெட்டியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த அருண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இதுகுறித்த புகாரின்படி, வேளச்சேரி போலீசார் வழக்கு பதிந்து சாய்ராம், அவரது நண்பர்கள் உட்பட நான்கு பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின், அவர்கள் ஜாமினில் வெளிவந்தனர்.வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் நடந்தது.போலீசார் தரப்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.கோவிந்தராஜன் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:குற்றம்சாட்டப்பட்ட நபர்களில், யாகேஷ்வரன் தவிர மற்ற நபர்கள் மீது, ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே சாய்ராம், யாகேஷ்வரனுக்கு தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமாக தலா 10,750 ரூபாய் விதிக்கப்படுகிறது. சித்தேஷ்வரய்யாவுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமாக 5,750 ரூபாயும், மணிபாரதிக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமாக 5,750 ரூபாயும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையில், 30,000 ரூபாயை, பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தார்.