| ADDED : ஏப் 08, 2024 02:42 AM
சென்னை:சென்னையில் இரண்டாம் கட்டமாக, 63,246 கோடி ரூபாய் மதிப்பில் 116 கி.மீ., துாரத்திற்கு மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.இதில், மாதவரம் - சிறுசேரி தடத்தில் மாதவரம் - தரமணி இடையே 21 கி.மீ.,க்கு 82 அடி ஆழத்தில் 82 அடி அகலத்தில் இரண்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகின்றன.தற்போது, பெருங்குடி, கந்தஞ்சாவடி பகுதிகளில், மெட்ரோ ரயில் பாதைக்கான பிரமாண்ட துாண்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள், ஏற்கனவே திட்டமிட்டப்படி நடந்து வருகின்றன. மாதவரம் - தரமணி இடையேயான சுரங்கப்பாதை தோண்டும் பணிகள், எந்த பாதிப்பு இன்றி நடக்கின்றன.அதேபோல், தரமணியில் இருந்து சோழிங்கநல்லுார் வழியாக சிறுசேரி வரை, மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் இயக்க, நுாற்றுக்கணக்கான துாண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் துாண்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்படும்.இதையடுத்து, துாண்களில் மேம்பால பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த தடத்தில் மெட்ரோ ரயில் பணிகளை முடிக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.